தாம்பரம் முதல் செங்கல்பட்டு சுங்கச்சாவடி வரை கடும் போக்குவரத்து நெரிசல்
|பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
சென்னை
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாட நேற்று மாலை முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் கூட பெரும்பாலான மக்கள் கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட தங்கள் சொந்த வாகனங்களில் பயணித்து வருகின்றனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பரனூர் சுங்கச்சாவடி வழக்கமாகவே எப்போதும் பரபரப்பாகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்தும் காணப்படும். இந்த நிலையில் நேற்று இரவு முதலே வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக செங்கல்பட்டு தாலுகா போலீசார் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் வாகனங்களை வேகமாக அனுப்பி வருகின்றனர்.
அதேபோல இந்த சுங்கச்சாவடியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் வாகனங்களை இலவசமாக அனுப்ப வேண்டுமென்று மாவட்ட கலெக்டர் நேற்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தார். தற்போது வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் இலவசமாக அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சிங்கம்பெருமாள் கோவில், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது அந்த பகுதிகளில் சற்று போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.