< Back
மாநில செய்திகள்
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு தேசிய கொடி ஏந்தி துப்பாக்கி சுடும் வீரர் தர்ணா போராட்டம்
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு தேசிய கொடி ஏந்தி துப்பாக்கி சுடும் வீரர் தர்ணா போராட்டம்

தினத்தந்தி
|
6 July 2023 3:04 AM IST

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தேசிய கொடி ஏந்தி துப்பாக்கி சுடும் வீரர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தேசிய கொடி ஏந்தி துப்பாக்கி சுடும் வீரர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

துப்பாக்கி சுடும் வீரர்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள காடபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் இலக்கியசெல்வன். தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். இவர் துப்பாக்கி சுடும் விளையாட்டு வீரர்களுக்காக ஈரோட்டில் கடந்த 2018-ம் ஆண்டு பயிற்சி அகாடமியை தொடங்கினார். இந்த அகாடமி பதிவு செய்யப்பட்டு தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கத்தாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அகாடமி இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது.

இந்த அகாடமியை செயல்படுத்த இலக்கியச்செல்வன் பல்வேறு முயற்சிகளை எடுத்தார். ஆனால் அதற்கு அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என தெரிகிறது. மேலும் அவரின் துப்பாக்கி உரிமத்தை கடந்த 10 மாதங்களாக புதுப்பிக்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தர்ணா

இந்த நிலையில் நேற்று காலை ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த இலக்கியச்செல்வன் திடீரென வளாகத்தில் அமர்ந்து தேசிய கொடியை கையில் ஏந்தியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு ஆதரவாக சிலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இலக்கியச்செல்வன் கூறும்போது, 'மதுரையில் வருகிற 11-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து அகாடமி சார்பில் வீரர்-வீராங்கனைகளை அனுப்ப வேண்டும். அதற்கு உடனடியாக அகாடமியை புதுப்பித்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். மேலும் எனது விளையாட்டு வாழ்க்கையை சீர்குலைக்க அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

பரபரப்பு

இதைத்தொடர்ந்து அங்கு வந்த ஈரோடு சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மோமதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயற்சி செய்தார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த ஈரோடு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து அவர், கலெக்டரை சந்தித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று அவர்களை அங்கிருந்து அழைத்து சென்றார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்