தமிழகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள் போதிய அளவில் கையிருப்பு உள்ளன - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
|தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு பயன்படுத்த 72 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை முறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், தற்போது உலகம் முழுவதிலும், 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் பி.எஃப்-7 என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ் பாதிப்பு பரவி வருவதாகவும், தமிழகத்தில் முதல்-அமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட மரபணு பரிசோதனைக் கூட்டத்தில், தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் பேசியதாவது;-
"தமிழகத்தைப் பொருத்தவரை 1.25 லட்சம் அளவுக்கு அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் உள்ளன. அதில் 72 ஆயிரம் படுக்கைகளை, கொரோனா பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு பயன்படுத்திக் கொள்ள ஏதுவான வகையில் தயார் நிலையில் உள்ளன.
மேலும் 3 மாதங்களுக்குத் தேவையான மருந்து கையிருப்புகள் உள்ளன. ஆக்சிஜனைப் சிலிண்டர்கள், கான்சென்டேட்டர்கள், ஜெனரேட்டர்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளன. எனவே மக்கள் பெரிய அளவில் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி, வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் ரேண்டம் முறையில் 2 சதவீதம் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்படி இன்று முதல் அந்த பரிசோதனைகள் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட 4 பன்னாட்டு விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து பயணிகளின் உடல் வெப்பநிலையைக் கண்காணிக்கவும், யாருக்காவது அதிகமான வெப்பநிலை கண்டறியப்பட்டால், அவர்களுக்கு பரிசோதனைகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன"
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.