சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெட்டிகள் இணைப்பு துண்டானதால் பரபரப்பு...!
|சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெட்டிகள் இணைப்பு துண்டானதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் சேரன் விரைவு ரயில் புறப்பட்டு திருவள்ளூர் அருகே இரவு 11 மணிக்கு சென்றபோது S7 மற்றும் S8 ஆகிய 2 பெட்டிகளிடையே பயங்கர சத்தம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ரெயிலில் பயணித்த ரெயில் பயணிகள் பயத்தில் அலறினர். திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4-வது மேடையில் ரெயில் சென்ற போது திடீரென்று இரண்டு பெட்டிகளை இணைக்கும் இணைப்பு கொக்கி துண்டிக்கப்பட்டு பலத்த சத்தம் கேட்டதால் ரெயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தினார்.
ஓட்டுநரின் சாமர்த்தியத்தாலும் பெருத்த உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரெயில்வே ஊழியர்கள் ரெயில் பெட்டிகளின் இணைப்பு துண்டிக்கப்பட்ட இடத்தில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதனால் ரெயில் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் இருப்புப்பாதை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர், சென்னை பெரம்பூர் கேரேஜில் இருந்து இணைப்பு கொக்கிகள் புதியதாக வரவழைக்கப்பட்டு அவை விரைவு ரெயிலுடன் இணைக்கப்பட்டு சுமார் 3 மணி நேரத்திற்கு பின் அரக்கோணம் மார்க்கமாக கோவைக்கு புறப்பட்டு சென்றது.