பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது - ஓ.பன்னீர்செல்வம்
|தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-
கவர்னர் மாளிகைமீது பெட்ரோல் வெடி குண்டு தாக்குதல், சென்னை கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீ வீரபத்ர சுவாமி கோவில்மீது குண்டு வீச்சு, சென்னையில் உணவக மேலாளர் ரவுடிகளால் அடித்துக் கொலை என்ற வரிசையில் சென்னை கொடுங்கையூர், ஆர்.ஆர். நகரில், குடியிருப்புகளுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் ரவுடிகளால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சூறையாடப்பட்ட வாகனங்களை சரி செய்யவே இலட்சக்கணக்கான ரூபாய் ஆகும் என்று பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தி.மு.க. அரசால் திணிக்கப்படும் தொடர் நிதிச் சுமை ஒருபுறம் என்றால், மறுபுறம் சட்டம் ஒழுங்கின்மை காரணமாக கூடுதல் நிதிச் செலவு ஏழை, எளிய மக்களுக்கு ஏற்படுகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. எப்பொழுது என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்து போயுள்ளனர். காவல் துறையிடம் உள்ள அச்சம் ரவுடிகளிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதற்குக் காரணம், ரவுடிகளை தி.மு.க. அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்காததுதான் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சட்டம் ஒழுங்கு இன்றியமையாதது என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பொதுமக்கள் அச்சமின்றி வாழக்கூடிய நிலைமையை உருவாக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.