திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நிறைமாத கர்ப்பிணி அலைக்கழிக்கப்பட்டதாக பரபரப்பு; மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் நேரில் விசாரணை
|திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நிறைமாத கர்ப்பிணி அலைக்கழிக்கப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் நேரில் விசாரணை நடத்தினார்.
கர்ப்பிணி
திருச்செந்தூர் பள்ளத்தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி கற்பகம். இவர் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 3 மகன்களும், துர்கா (21) என்ற மகளும் உள்ளனர்.
துர்க்காவுக்கும், ரமேஷ் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. இவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் துர்கா கர்ப்பமானதால் சில மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூரில் உள்ள தாயாரின் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
அலைக்கழிப்பு
கடந்த 14-ந்தேதி நிறைமாத கர்ப்பிணியான துர்காவிற்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. உடனே அவரை திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
நேற்று முன்தினம் மாலையில் மருத்துவ பணியாளர்கள், துர்காவின் தாயாரிடம், துர்காவை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கூறினர். பின்னர் துர்காவுக்கு அளித்த சிகிச்சையை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கற்பகம் தனது மகளை சிகிச்சைக்காக திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு துர்காவுக்கு நேற்று மதியம் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண் அலைக்கழிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இணை இயக்குனர் விசாரணை
இதையடுத்து மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பொன் இசக்கி நேற்று திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, பிரசவ வார்டு பணியாளர்களிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் துர்கா மற்றும் குழந்தையையும் சந்தித்து நலம் விசாரித்தார். அரசு ஆஸ்பத்திரியில் நடந்த சம்பவத்தை பற்றி கற்பகத்திடம் கேட்டறிந்தார்.
பின்னர் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பொன் இசக்கி கூறுகையில், ''திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண் அலைக்கழிக்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து நேரில் விசாரணை நடத்தினேன். இந்த சம்பவத்தில் எங்கு தவறு நடந்துள்ளது? என்பது குறித்து பேறுகால மருத்துவ நிபுணர் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.