< Back
மாநில செய்திகள்
குன்றத்தூர் பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பிட கழிவுகளை மழைநீர் கால்வாயில் விடுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

குன்றத்தூர் பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பிட கழிவுகளை மழைநீர் கால்வாயில் விடுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்

தினத்தந்தி
|
31 July 2023 8:46 AM GMT

குன்றத்தூர் பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பிட கழிவுகளை மழை நீர் கால்வாயில் விடுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கட்டண கழிப்பிடம்

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து தினந்தோறும் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குன்றத்தூர் பஸ் நிலைய வளாகத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டண கழிப்பிடம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படாததால் பஸ் நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசும் சூழல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கட்டண கழிப்பிடத்திற்கு என்று கழிவுகளை சேகரிக்க தனியாக தொட்டிகள் இருந்தும் அதனை முறையாக பராமரிக்காததால் கழிவு நீர் தொட்டி நிறைந்து விடுகிறது. இதனால் கழிவுகள் அனைத்தும் நேரடியாக அருகில் உள்ள மழைநீர் கால்வாயில் கலக்கும்படி விடப்படுகிறது. இதனால் மழைநீர் செல்லும் கால்வாயில் அதிக அளவில் மனித கழிவுகளே செல்கிறது.

தொற்றுநோய் பரவும் அபாயம்

இதனால் பஸ் நிலைய வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதற்கு முக்கிய காரணம் கழிவு நீர் தொட்டியில் கழிவுகள் அதிகமாக சேர்ந்தால் அதனை அகற்றுவதற்கு அதிக கட்டணம் கொடுத்து லாரிகளில் எடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அனைத்து கழிவுகளும் மழை நீர் கால்வாயில் நேரடியாக விடப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மூக்கை பிடித்தபடி பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் அதிக அளவில் மனித கழிவுகள் மழை நீர் கால்வாயில் கலப்பதால் பயணிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களிடம் இருந்து கட்டணம் வசூலித்து கட்டண கழிப்பிடம் நடத்தி வரும் நிலையில் அந்த மனித கழிவுகளை முறையாக அகற்றாமல் நேரடியாக மழை நீர் கால்வாயில் விடுவதை நகராட்சி நிர்வாகம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்