< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணி முடியாததால் பூண்டி ஏரியில் மழைநீரை சேமிப்பதில் சிக்கல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணி முடியாததால் பூண்டி ஏரியில் மழைநீரை சேமிப்பதில் சிக்கல்

தினத்தந்தி
|
8 Oct 2022 2:49 PM IST

கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணி முடியாததால் பூண்டி ஏரியில் மழை நீரை சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த ஏரியின் அருகே நீரியல் ஆய்வுகூடம் உள்ளது. பூண்டி ஏரியில் தேங்கும் நீரை அங்குள்ள கிணறு மதகு வழியாக நீரியல் ஆய்வு கூடத்துக்கு செல்வது வழக்கம்.

கடந்த ஆண்டு பெய்த கனமழைக்கு பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. தண்ணீரின் அழுத்தத்தால் ஏரியின் அருகில் இருந்த மதகு சேதமடைந்து நீரியல் ஆய்வு கூட்டத்தில் வெள்ளம் பாய்ந்தது.

இந்த நிலையில் சேதமடைந்த மதகு கிணறு அகற்றப்பட்டு புதிதாக 3 கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஊத்துக்கோட்டை ஜீரோ பாண்டில் இருந்து பூண்டி ஏரி வரை உள்ள கால்வாய் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு கரைகள் பலப்படுத்தப்படுகின்றன.

இதற்காக பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் முழுவதும் ஏற்கனவே புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்ப பட்டுவிட்டது. தற்போது பூண்டி ஏரியில் வெறும் 609 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதற்கிடையே பூண்டி கால்வாய் சீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை.

தற்போது மழைபெய்ய தொடங்கி உள்ளதால் கால்வாய் வழியாக வரும் மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கால்வாயில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே பருவமழை தீவிரம் அடைவதற்குள் கால்வாய் சீரமைப்பு பணிகளை முழுவதுமாக முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்