விருதுநகர்
சாமி கும்பிடுவதில் இரு தரப்பினர் இடையே பிரச்சினை
|ஆவியூரில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரியாபட்டி,
ஆவியூரில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியல்
காரியாபட்டி அருகே ஆவியூர் கிராமத்தில் ஒரு கோவிலில் சாமி கும்பிடுவதில் இருதரப்பினருக்கிடையே பிரச்சினை இருந்து வருகிறது. இந்தநிலையில் ஒரு தரப்பினர் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு திடீரென மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் மீது கற்கள் வீச்சு
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் தலைமையிலான போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மற்றொரு தரப்பினர் பகுதிக்கு சென்று கற்கள் வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது தாக்குதலை தடுக்க சென்ற போலீசார் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
8 பேர் கைது
மேலும் தாக்குதல் நடைபெற்ற இடத்தை மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். ஆவியூர் கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் 700-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 280 பேர் மீதும், போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்திய 35 பேர் மீதும் ஆவியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 8 பேரை கைது செய்தனர்.