பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத மோசமான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது - ஓ.பன்னீர்செல்வம்
|பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத மோசமான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் I.N.D.I.A-விற்கு நேரம் ஒதுக்குவதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீரழிவை சரிசெய்ய நேரம் ஒதுக்குவது பயனுள்ளதாக இருக்கும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"சென்னை, சைதாப்பேட்டை இரயில் நிலையத்தில் ஒரு பெண்மணி சரமாரியாக வெட்டப்பட்டு உயிரிழந்து இரண்டு வாரங்களே ஆகியுள்ள நிலையில், சென்னை பெருங்களத்தூர் இரயில் நிலையத்தில் இன்று தமிழ்ச்செல்வி என்பவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்துள்ளார் என்ற செய்தி பேரதிர்ச்சியை அளிக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்ச்செல்வி விரைந்து பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன்.
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டே செல்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத ஒரு மோசமான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் I.N.D.I.A-விற்கு நேரம் ஒதுக்குவதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீரழிவை சரிசெய்ய நேரம் ஒதுக்குவது பயனுள்ளதாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.