கடலூர்
வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு
|நெல்லிக்குப்பத்தில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் கோண்டூரில் இருந்து மடப்பட்டு வரை ரூ.230 கோடியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சரியான முறையில் அளவீடு செய்யாமல் ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளை மேற்கொண்டதாக அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஏற்கனவே துறைக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து அதற்கான குறியீடுகளை வரைந்து இருந்தனர். ஆனால் நேற்று ஏற்கனவே குறியீடு வரைந்த வரை ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் திடீரென்று சாலை ஓரத்தில் பள்ளம் தோண்டப்பட்டு வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்றது.
சாலை மறியல்
இதுபற்றி அறிந்த ம.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், நகர அ.தி.மு.க. செயலாளர் காசிநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், நகர செயலாளர் திருமாறன், சமூக ஆர்வலர் குமரவேல், கவுன்சிலர்கள் முத்தமிழன், சத்யா, புனிதவதி, மலையான் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் அதிகாரிகளிடம் உரிய முறையில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்து பணிகளை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினர். அதன் பேரில் பொக்லைன் எந்திரம் கொண்டு ஏற்கனவே குறியீடு வரைந்த இடம் வரை இருந்த கட்டிடத்தை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்பு அகற்றினார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.