திருச்சி
ஏரியில் இறங்கி தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு
|ஏரியில் இறங்கி தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
துறையூர்:
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள நத்தக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் தனது தாயுடன் துறையூருக்கு வந்தார். அங்கு ஓட்டல் ஒன்றில் சாப்பிட சென்றபோது தனது தாயிடம், தனக்கு செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பத்மநாபன் எதிரே இருந்த சின்ன ஏரிக்கு சென்று தண்ணீரில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி உள்ளார்.ஏரியில் முழங்கால் அளவு மட்டுமே தண்ணீர் இருந்த நிலையில், அவர் ஏரியில் இருந்து வெளியே வராமல் இருந்தார். இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை ஆற்றைவிட்டு வெளியே வருமாறு கூறினர். அப்போது 'உடலில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் இருக்கிறேன். எனக்கு வேட்டி ஒன்றை கொடுங்கள்' என்று கேட்டுள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் வேட்டி ஒன்றை ஏரி நீரில் வீசி, அதை கட்டிக்கொண்டு மேலே வருமாறு பத்மநாபனிடம் கூறியுள்ளனர் வேட்டியை கட்டிக்கொண்ட பத்மநாபன் மீண்டும் ஏரியிலேயே நின்றார். சுமார் 3 மணி நேரமாக ஏரியில் அவர் நின்ற நிலையில், போலீசார் அங்கு வந்து அவரை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர் ஏரியில் இருந்து கரையேறினார். இதையடுத்து போலீசார் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.