< Back
மாநில செய்திகள்
மாநகரில் புதிதாக 4 இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள்
திருச்சி
மாநில செய்திகள்

மாநகரில் புதிதாக 4 இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள்

தினத்தந்தி
|
22 July 2022 2:58 AM IST

மாநகரில் புதிதாக 4 இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒளிரும் மின்விளக்கு கம்பங்கள்

திருச்சி மாநகரில் தலைமை தபால் நிலையம், ஒத்தக்கடை, மன்னார்புரம், புத்தூர்நால் ரோடு, திருவானைக்காவல் மாம்பழச்சாலை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அங்கு விபத்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகர காவல்துறை அதிகாரிகள் கலந்து ஆலோசனை செய்ததை தொடர்ந்து, திருச்சி மாநகரில் குட்ஷெட் மேம்பாலம், கல்லுக்குழி, பாரதியார்சாலை ஆர்.சி.பள்ளி அருகே, அரிஸ்டோ மேம்பாலம் அருகே உள்ளிட்ட 4 இடங்களில் புதிதாக 8 ஒளிரும் மின்விளக்கு கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது.

விபத்துகள் குறையும்

குறிப்பாக மூன்று சாலைகள் பிரியும் முக்கிய சந்திப்புகளில் வாகன ஓட்டிகளுக்கு இரவு நேரங்களில் வழித்தடம் குறித்த அடையாள குறியீடாகவும், வளைவில் திரும்பும் இடம் (U TURN) குறித்து காட்சிப்படுத்தவும் இந்த கம்பங்களில் உள்ள ஒளிரும் மின்விளக்குகள் பயன்பட உள்ளது.

இது குறித்து போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் முருகேசன் கூறுகையில், "மாநகரில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து சிக்னல்கள் இருந்தாலும் ஒரு சில சந்திப்புகள் மற்றும் வளைவில் திரும்பும் இடங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்கள் வருவதால் விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்க தற்போது ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்துகள் பெருமளவு குறைய வாய்ப்புள்ளது" என்றார்.

மேலும் செய்திகள்