விழுப்புரம்
சுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்
|கெடார் கிராமத்தில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் தெப்ப உற்சவ நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரத்தை அடுத்த கெடார் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சூரசம்ஹார திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் முத்துப்பல்லக்கில் சாமி வீதிஉலாவும், சூரசம்ஹாரத்தையொட்டி சூரனுக்கு சாமி காட்சி தருதல், வேலுக்கு பாலாபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி திருக்கல்யாணமும், இரவு 12 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சாமி, தெப்ப உற்சவத்தில் எழுந்தருள வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் தெப்ப உற்சவம் நடந்தது.
இதில் கெடார் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை செங்குந்த மரபினர் மற்றும் கெடார் பகுதி மக்கள் செய்திருந்தனர்.