விழுப்புரம்
அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்
|மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேல்மலையனூர்,
மேல்மலையனூரில் உள்ள பிரசித்திபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் மாசிப் பெரு விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து மறுநாள் மயானக்கொள்ளை, 22-ந் தேதி தீமிதி திருவிழா, 24-ந் தேதி தேரோட்டம் ஆகிய விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் வெவ்வேறு வாகனத்தில் அம்மன் வீதிஉலாவும் நடைபெற்று வந்தது.
விழாவின் 10-ம் நாள் விழாவான நேற்று முன்தினம் தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு தீர்த்தவாரி மண்டகப்படி நடைபெற்றது. பின்னர் மாலை 4 மணிக்கு பூசாரிகள் அம்மனை பல்லக்கில் ஊர்வலமாக அக்னி குளத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
இதையடுத்து இரவு 8 மணிக்கு அங்கிருந்த பம்பை, மேளம் முழங்க அம்மன் ஊர்வலமாக புறப்பட்டு மந்தைவெளியில் எழுந்தருளினார்.
தெப்ப உற்சவம்
தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலில் உள்ள கங்கையம்மன் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார்.
இதையடுத்து அம்மன் தெப்பலில் குளத்தை சுற்றிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.