திருவள்ளூர்
திருத்தணி முருகன் கோவிலில் தெப்ப திருவிழா
|திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் ஆடி கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்ப திருவிழா நடந்தது. இந்நிலையில் நேற்று 2-ம் நாள் தெப்ப திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா, கர்நாடக, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி, மூலவர் முருகப்பெருமானை தரிசித்து சென்றனர்.
மேலும், அதிகளவு திரண்ட பக்தர்கள் கூட்டத்தால் பொதுவழியில் 3 மணி நேரம் கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மலைக்கோவிலுக்கு செல்ல கார் பாஸ் வைத்திருந்தால் மட்டும் அனுமதி இருந்த நிலையில், நேற்று மதியத்திற்கு மேல் அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டது.
நேற்று மாலை 7 மணிக்கு நடைப்பெற்ற 2-ம் நாள் தெப்பத்திருவிழாவில் உற்சவர், வள்ளி, தெய்வானையுடன் சமேதராய் மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தெப்பத்திருவிழாவையொட்டி மாலை 4 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோவில் பணியாளர்களின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து பத்மஶ்ரீ சீர்காழி சிவசிதம்பரம் குழுவினரின் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்றது.