தேனி: வாக்கு எண்ணும் மையத்துக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர் கைது
|தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட வாக்குப்பெட்டிகள் கம்மவார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.
தேனி,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19-ந்தேதி நடந்தது. தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் 1,788 வாக்குப்பதிவு மையங்களில் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளிட்டவை பாதுகாப்பாக எடுத்து வரப்பட்டு, தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார், நுழைவு வாயிலில் மாவட்டத்தில் பணியாற்றும் உள்ளூர் போலீசார் என வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 மடங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையை வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்களும் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்துக்குள் நேற்று ஒரு வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். போலீசார் அவரை நிறுத்த முயற்சித்த போது போலீசாரின் தடையை மீறி உள்ளே நுழைந்தார். பின்னர் அவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் சின்னமனூர் அருகே சீப்பாலக்கோட்டை ராஜா தெருவை சேர்ந்த செல்வம் மகன் ராஜேஷ் கண்ணன் (வயது 27) என்பது தெரியவந்தது. வாக்கு எண்ணும் மையத்துக்குள் அத்துமீறி நுழைந்தது குறித்து அவரிடம் போலீசார் விசாரித்தபோது, 'இது எங்க ஏரியா. அப்படித் தான் வருவேன்' என்று கெத்தாக பேசியதோடு, அங்கிருந்த போலீசார், அரசு அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், அவர் அதே கல்லூரியில் ஊழியராக வேலை பார்ப்பதாக கூறினார். கல்லூரி நிர்வாகத்திடம் போலீசார் விசாரித்த போது, அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஊழியராக பணியாற்றியதாகவும், தற்போது அங்கு அவர் பணியாற்றவில்லை என்றும் கூறியுள்ளனர்.
இதையடுத்து ராஜேஷ் கண்ணனை பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தனர். இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் மதுக்கண்ணன் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், இந்திய தண்டனை சட்டம் 448 (அத்துமீறி நுழைதல்), 294 (பி) (ஆபாசமாக பேசுதல்), 506(2) (கொலை மிரட்டல் விடுத்தல்), 353 (அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) ஆகிய 4 பிரிவுகளில் ராஜேஷ் கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
அவர் அத்துமீறி நுழைந்ததற்கு அரசியல் காரணங்கள் எதுவும் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், அப்படி எந்த காரணமும் இல்லை என்று தெரியவந்தது. இருப்பினும் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து அவரை இன்று தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.