தேனி
தேனி ராஜவாய்க்கால், நெடுஞ்சாலையில்பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்:மாடி வீடுகளும் இடித்து தரைமட்டம்
|தேனி ராஜவாய்க்கால், நெடுஞ்சாலையில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன. மாடி வீடுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
ராஜவாய்க்கால்
தேனி நகரில் கொட்டக்குடி ஆற்றின் தடுப்பணையில் இருந்து தாமரைக்குளம் கண்மாய் வரை சுமார் 2 கிலோமீட்டர் நீளம் ராஜவாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தது. பாசன நிலங்களும் குடியிருப்புகளாக மாறின. இதனால் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதே நேரத்தில் வாய்க்கால் பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேல் குடியிருக்கும் வீடற்ற மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக தொடரப்பட்ட ஒரு வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வீடற்ற நபர்களுக்கு மாற்று இடம் வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதேபோல், தேனி பங்களாமேடு முதல் அரண்மனைப்புதூர் விலக்கு வரை சாலையோரம் வசித்த மக்களுக்கும் மாற்று இடம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
55 பேருக்கு மாற்று இடம்
இந்த இரு இடங்களிலும் வீடற்ற 55 பேருக்கு வருவாய்த்துறை சார்பில் நேற்று முன்தினம் சீலையம்பட்டி அருகே வீட்டுமனை வழங்கப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று வாய்க்கால் மற்றும் நெடுஞ்சாலை பகுதிக்கு வந்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் இடங்களில் பாதுகாப்பு கருதி மின் இணைப்புகளை துண்டிக்க மின்வாரிய அதிகாரிகளும் வந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஆக்கிரமிப்பாளர்கள் பலரும் தாங்களாக முன்வந்து வீட்டில் இருந்த மேற்கூரை, கதவு, ஜன்னல் போன்றவற்றை அகற்றிக் கொண்டனர். சடையால் கோவில் தெருவில் உடமைகளை எடுத்துக் கொள்வதற்கு ஓரிரு நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். ஆனால், அவகாசம் வழங்க அதிகாரிகள் மறுத்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பின்னர் பெரியகுளம் ஆர்.டி.ஓ. முத்துமாதவன் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் அதிரடியாக தொடங்கியது. பொக்லைன் மற்றும் கிட்டாச்சி வாகனங்கள் மூலம் கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. 2 மாடி கட்டிடங்களும், வீடுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. மதுரை நெடுஞ்சாலையோரம் இருந்த கட்டிடங்களும் இடிக்கப்பட்டன.
ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. பழைய பஸ் நிலையம் எதிரே இருந்த கழிப்பிட கட்டிடங்கள் மற்றும் வணிக கட்டிடங்களும் இடிக்கப்பட்டன. ராஜவாய்க்காலில் மட்டும் 130-க் கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன. எஞ்சிய ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் இன்றும் (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.