தேனி
தேனி ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்
|தேனி ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது
தேனி கொட்டக்குடி ஆற்றில் உள்ள தடுப்பணையில் இருந்து மதுரை சாலையில் உள்ள தாமரைக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் செல்வதற்கு சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு தேனியாறு ராஜவாய்க்கால் அமைக்கப்பட்டது. சுமார் 200 ஏக்கர் நேரடி பாசனமும், 111 ஏக்கர் நிலங்கள் கண்மாய் மூலம் பாசனமும் பெற்று வந்தன. காலப்போக்கில் விளை நிலங்களில் கட்டிடங்கள் கட்டப்பட்டு குடியிருப்பு விரிவாக்கம் செய்யப்பட்டதால் ராஜவாய்க்கால் தூர்ந்து போனது.
30 ஆண்டுகளுக்கும் மேல் இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் இருந்தது. இதனால் மழைக் காலங்களில் மதுரை சாலை, பழைய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இந்த வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், பொதுப்பணித்துறை சார்பில் வாய்க்கால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படாமல் இருந்தது.
இதையடுத்து கடந்த 2 மாதத்துக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் சார்பில் தூர்வாரும் பணி தொடங்கியது. போதிய நிதியின்றி பணிகள் சில நாட்கள் முடங்கின. பின்னர் மீண்டும் பணிகள் தொடங்கி தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக பழைய பஸ் நிலையம் பின் பகுதியில் பணிகள் நடந்து வருகின்றன.