தேனி: போக்சோ கைதி அரளிக்காயை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
|கேரள எல்லையில் உள்ள போடி வனப்பகுதி அருகே விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர்.
தேனி,
தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் கடந்த மாதம் பள்ளி சிறுவர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக தேனி மாவட்ட கோர்ட்டுக்கு விஜயகுமாரை போலீசார் அழைத்து வந்தனர். விசாரணை முடிந்து வெளியே வந்தபோது போலீசின் பிடியில் இருந்து தப்பியோடிய விஜயகுமார், அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்குள் சென்று பதுங்கினார்.
இதையடுத்து விஜயகுமாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, 5 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த போலீசார், கேரள எல்லையில் உள்ள போடி வனப்பகுதியில் வைத்து அவரை கைது செய்தனர். அப்போது மலைப்பகுதிக்குள் ஏற்கனவே பறித்து வைத்திருந்த அரளிக்காய்களை சாப்பிட்டு விஜயகுமார் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார், அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.