தேனி
தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில்எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க பணம் வசூல்; தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து:அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி உத்தரவு
|தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க பணம் வசூல் செய்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
ஸ்கேன் எடுக்க ரூ.2,500
தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அனைத்து சிகிச்சை பிரிவுகளுக்கும் சென்று ஆய்வு செய்தார். நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்களிடம் குறைகள் கேட்டார்.
அப்போது தனியார் நிறுவன ஒப்பந்தத்துடன் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கும் மையத்தில் ஆய்வு செய்தார். அங்கு ஸ்கேன் எடுக்க காத்திருந்த மக்களிடம், பணம் கட்டி ஸ்கேன் எடுக்கிறீர்களா? இலவசமாக எடுக்கிறீர்களா? என்று அமைச்சர் கேட்டார். அதற்கு அங்கிருந்த பெண் ஒருவர், ரூ.2,500 கட்டி எடுப்பதாக கூறினார். இதைக் கேட்ட அமைச்சர், 'காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்தி இலவசமாக ஸ்கேன் எடுக்க வேண்டியது தானே. ஏன் பணம் வசூலிக்கிறீர்கள். அதிகாரிகள் இதை கண்காணிப்பது இல்லையா?' என அதிகாரிகளை சரமாரியாக கேள்விகள் கேட்டு கண்டித்தார்.
ஒப்பந்தம் ரத்து
நேற்றைய தினம் 10 பேர் ஸ்கேன் எடுத்து இருந்ததால், அனைவரின் செல்போன் எண்ணுக்கும் தொடர்பு கொண்டு யாரெல்லாம் பணம் கொடுத்து ஸ்கேன் எடுத்தார்கள் என்ற விவரத்தை கேட்டறிந்து அவர்களிடம் புகார் எழுதி வாங்குமாறு அங்கிருந்த அலுவலர் ஒருவருக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
விசாரணையில் மொத்தம் 7 பேர் பணம் கொடுத்து ஸ்கேன் எடுத்ததாக தெரியவந்தது. இதையடுத்து அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியுடன் ஒப்பந்தம் போடப்பட்டு ஸ்கேன் எடுத்து வந்த கிருஷ்ணா டைகனாஸ்டிக் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். மேலும், தேசிய நலவாழ்வு குழுமத்தின் மூலம் புதிய எம்.ஆர்.ஐ ஸ்கேன் எந்திரம் வாங்கவும், அதற்குரிய பணியாளர்களை நியமிக்கவும் மருத்துவ கல்லூரி அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.