< Back
மாநில செய்திகள்
தேனி தொகுதியை டி.டி.வி. தினகரனுக்கு விட்டுக் கொடுத்தது ஏன்? ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
மாநில செய்திகள்

தேனி தொகுதியை டி.டி.வி. தினகரனுக்கு விட்டுக் கொடுத்தது ஏன்? ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

தினத்தந்தி
|
23 March 2024 3:27 PM IST

டி.டி.வி. தினகரனுக்கு நன்றிக் கடனாக தேனி தொகுதியை விட்டுக்கொடுத்தோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. திருச்சி மற்றும் தேனி ஆகிய தொகுதிகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பா.ஜ.க ஒதுக்கியது.

தேனி மக்களவை தொகுதியில் தற்போது எம்.பி.யாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேனி தொகுதியை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தேனி மக்களவை தொகுதியில் டி.டி.வி தினகரன் போட்டியிட உள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இன்று தேனியில் உள்ள தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"வரும் நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்களை களம் இறக்கினால் மிகப்பெரும் பொருளாதார செலவு ஏற்படும். அந்த செலவுகளுக்கு பின்னாலும் பல்வேறு சோதனைகளை தொண்டர்கள் சந்திக்க வேண்டிவரும்.

எனவே தொண்டர்களை சோதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்பதற்காகத்தான் இந்த மாபெரும் பொறுப்பை நானே ஏற்று தான் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்.

கடந்த 1999-ல் பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொடுத்தார். உதவிகளையும் அளித்தார்.

அடுத்த தேர்தலில் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தாலும்,அவர் மேல் சபை எம்.பி. ஆனார். அவரது எண்ணம், செயல், இதயம் தேனியை சுற்றியே இருந்தது என்பதை நான் நன்றாகவே அறிவேன். அதனால் தேனி தொகுதியில் தினகரன் போட்டியிட நாங்கள் அபிப்ராயம் தெரிவித்தோம்.

அதன்படி தேனி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாய கூட்டணி ஆதரவுடன் போட்டியிடும் தினகரனை வெற்றி பெற செய்ய பாடுபட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என்று கூட்டணி தலைமை, தொண்டர்கள் விரும்பினர். தேனி தொகுதியில் நிற்க டி.டி.வி.தினகரன் விரும்பியதால் நமது நன்றி கடனை தெரிவிக்கும் வகையில் தேனி தொகுதியை அவருக்கு விட்டுக் கொடுத்தோம்.

நான் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை ரகசியமாக வைத்திருந்தேன். நீதி கேட்க ராமநாதபுரம் தான் சரியான தொகுதி என்று முடிவு செய்தேன். சரியான விடை அவர்களால் தான் தர முடியும்.

அ.தி.மு.க. உண்மை தொண்டர்களின் உரிமையை காக்கும் இந்த போராட்டம் வெற்றியடைந்து அது ஒரு சக்தியாக வெளிப்படும் தொகுதி ராமநாதபுரம் தான்.

நான் ராமநாதபுரம் சென்றாலும் என் இதயம் இங்கு தான் இருக்கும். ரவீந்திரநாத் எம்.பி.யின் முயற்சியில் தான் ரெயில் பாதை அமைக்கப்பட்டது. போடியில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு ரெயில்கள் சென்று வருகின்றன. இது போன்று பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.டி.வி.தினகரனை அமோக வெற்றியடைய செய்ய வேண்டும்." என்றார்.

தேனி தொகுதியில் தி.மு.க சார்பில் தங்கதமிழ் செல்வனும் அ.தி.மு.க சார்பில் நாராயணசாமியும் போட்டியிடுகிறார்கள்.

மேலும் செய்திகள்