தேனி
தேனி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: தூக்குப்போட போவதாக கோஷம் எழுப்பிய தொழிலாளி
|தேனி கலெக்டர் அலுவலகத்தில் தூக்குப்போட போவதாக கையில் கயிற்றுடன் கோஷம் எழுப்பி வந்த தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது
தேனியை சேர்ந்தவர் முருகன் (வயது 52). இவர், மாடுகளின் கால்களுக்கு லாடம் அடிக்கும் தொழிலாளி. இவர், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் கையில், ஒரு கயிறு கொண்டு வந்தார். அந்த கயிற்றைக் கொண்டு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்ற மரத்தில் தூக்குப்போட போவதாக திடீரென கோஷம் எழுப்பினார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடிச்சென்று அவரிடம் இருந்த கயிற்றை வாங்கினர்.
பின்னர் அவரிடம் போலீசார் விசாரித்தபோது, "நான் அன்னஞ்சியை சேர்ந்த ஒருவரிடம் 7 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.35 ஆயிரம் கடன் வாங்கினேன். அவர் வளர்த்து வரும் வண்டி மாடுகளுக்கு லாடம் அடித்து, அதில் கிடைக்கும் கூலியை வட்டியாக செலுத்தினேன். ரூ.40 ஆயிரம் வரை செலுத்திய நிலையில் மேலும் பணம் கேட்கிறார். போலீசில் புகார் கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை" என்று அவர் கூறினார். பின்னர் அவரை போலீசார், அல்லிநகரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.