தேனி
தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு ராஜினாமா கடிதத்துடன் வந்த திருமலாபுரம் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர்
|தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு திருமலாபுரம் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா கடிதத்துடன் வந்தனர்
ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் திருமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கனிராஜா தலைமையில், துணைத்தலைவர் செல்லம்மாள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் 6 பேர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் தங்களின் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறி ராஜினாமா கடிதத்துடன் வந்தனர்.
அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், "ஊராட்சி எழுத்தர் 20 ஆண்டுகளாக ஒரே ஊராட்சியில் பணியாற்றி வருகிறார். இதனால் எங்களை மக்கள் பணியை செய்ய விடாமல் தடுக்கிறார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திலும் முறைகேடு நடக்கிறது. எனவே ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்யக்கோரி பலமுறை மனு கொடுத்தும். மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் விசாரணை நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளோம்" என்றனர்.
பின்னர், அவர்கள் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது மாவட்ட கலெக்டர் முரளிதரன், மீன்வளத்துறை அமைச்சரின் ஆய்வு தொடர்பாக வெளியே சென்று இருப்பதாகவும், துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு கொடுக்குமாறும் அங்கிருந்த அலுவலர்கள் கூறினர். ஆனால் அவர்கள் கலெக்டரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுக்க வேண்டும் என்றும், மீண்டும் வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) கலெக்டரை நேரில் சந்தித்து கடிதத்தை கொடுக்கப்போவதாகவும் கூறிச் சென்றனர்.