< Back
மாநில செய்திகள்
தேனி மேற்கு சந்தையில்நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைக்கு சீல்
தேனி
மாநில செய்திகள்

தேனி மேற்கு சந்தையில்நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைக்கு 'சீல்'

தினத்தந்தி
|
12 Sept 2023 12:15 AM IST

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு வாடகை செலுத்தாததால் மேற்கு சந்தையில் உள்ள ஒரு கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்ட கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

வாடகை பாக்கி

தேனி அல்லிநகரம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் மேற்கு சந்தை, கிழக்கு சந்தை, பெரியகுளம் சாலை, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் மொத்தம் 642 கடைகள் உள்ளன. இந்த கடைகள் மாத வாடகை அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. கடைகளை நடத்துபவர்கள் மாதந்தோறும் வாடகை செலுத்த வேண்டும்.

ஆனால், ஏராளமான கடைக்காரர்கள் வாடகை செலுத்தாமல் நீண்ட காலமாக நிலுவையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற கடைக்காரர்களுக்கு வாடகை செலுத்துமாறு நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மேற்கு சந்தையில் கருவாட்டுக்கடை நடத்திய நபர் நகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் நீண்ட காலமாக பாக்கி வைத்திருந்தார். இதனால் அந்த கடைக்கு 'சீல்' வைக்க நகராட்சி ஆணையர் கணேசன் உத்தரவிட்டார்.

'சீல்' வைப்பு

அதன்பேரில் நகராட்சி அதிகாரிகள் குழுவினர் நேற்று காலையில் அந்த கடையை பூட்டி 'சீல்' வைத்தனர். மேலும் இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, 'நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்பட்டு வரும் 500-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு கடந்த 6 மாதங்களாக கடைக்காரர்கள் வாடகை செலுத்தாமல் உள்ளனர். ஒவ்வொரு மாதமும் 5-ந்தேதிக்குள் வாடகை செலுத்த வேண்டும்.

2 மாத காலம் வாடகை செலுத்தாவிட்டாலும் கடைக்கு 'சீல்' வைக்கலாம். இருப்பினும் தற்போது வாடகையை பாக்கியின்றி செலுத்துமாறு 500-க்கும் மேற்பட்ட கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. வாடகை செலுத்தாமல் நிலுவையில் உள்ள மற்ற கடைகளுக்கும் 'சீல்' வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்