< Back
மாநில செய்திகள்
தேனி: குமுளி மலைச்சாலையில் கார் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு - நிவாரணம் அறிவிப்பு
மாநில செய்திகள்

தேனி: குமுளி மலைச்சாலையில் கார் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு - நிவாரணம் அறிவிப்பு

தினத்தந்தி
|
24 Dec 2022 11:14 PM IST

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ50 ஆயிரமும் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அய்யப்ப பக்தர்கள் 10 பேர் கார் ஒன்றில் சபரிமலைக்கு சென்று தரிசனம் முடித்து இரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். குமுளி மலைச்சாலையில் உள்ள பாலம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சுமார் 50அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து வந்த தமிழக- கேரள மாநில போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சுமார் 50அடி பள்ளத்தில் சிக்கியிருந்த காருக்குள் இருந்த அய்யப்ப பக்தர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் விபத்தில் சம்பவ இடத்திலேயே 7பேர் பரிதாபமாக பலியாகினர். 9 வயது சிறுவன் உள்பட 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. மற்ற இருவரும் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தில் உயிரிழந்த அய்யப்ப பக்தர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அனைவரது சடலங்கள் உடற்கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து குமுளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தேனி மாவட்டம் குமுளி மலைச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்-அமைச்சர்

மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் உட்பட பத்து நபர்கள் சபரிமலை கோவிலுக்கு சென்று திரும்புகையில், அவர்கள் வந்த வாகனம் நேற்று இரவு உத்தமபாளையம் வட்டம், குமுளி மலைப்பாதையில் எதிர்பாராதவிதமாக விழுந்து விபத்துக்குள்ளானது.

இச்செய்தியை அறிந்தவுடன், தேனி மாவட்ட பொறுப்பு அமைச்சரான ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. இ. பெரியசாமி, அவர்களை உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, விபத்துக்குள்ளானவர்களுக்கு உரிய உதவிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினேன்.

இந்த விபத்தில் திரு.நாகராஜ் (வயது 50). திரு.முனியாண்டி என்ற சாக்கு கடை முனியாண்டி, திரு.சிவக்குமார் (வயது 41), திரு.வினோத்குமார் (வயது 43), திரு.கண்ணுச்சாமி (வயது 65), திரு.தேவதாஸ் (வயது 55), திரு.கலைச்செல்வன் (வயது 35), மற்றும் திரு.கோபாலகிருஷ்ணன் (வயது 48) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில் காயமுற்று தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 2 நபர்களுக்கு, சிறப்பு சிகிச்சை அளித்திட உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்த 2 நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்