< Back
மாநில செய்திகள்
காரிமங்கலம் அருகே காரை வழிமறித்து கொள்ளையடித்த கேரளாவை சேர்ந்த 9 பேர் கைது; 6 கிலோ தங்க நகைகள், 4 கார்கள் பறிமுதல்
தர்மபுரி
மாநில செய்திகள்

காரிமங்கலம் அருகே காரை வழிமறித்து கொள்ளையடித்த கேரளாவை சேர்ந்த 9 பேர் கைது; 6 கிலோ தங்க நகைகள், 4 கார்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
22 Oct 2023 12:30 AM IST

காரிமங்கலம் அருகே காரை வழிமறித்து நகைகளை கொள்ளையடித்த கேரளாவை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ தங்க நகைகள், 4 கார்களை பறிமுதல் செய்யப்பட்டன.

காரிமங்கலம் அருகே காரை வழிமறித்து நகைகளை கொள்ளையடித்த கேரளாவை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ தங்க நகைகள், 4 கார்களை பறிமுதல் செய்யப்பட்டன.

நகைகள் கொள்ளை

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 40). இவர் கோவையில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு தேவையான நகைகளை பெங்களூருவில் வாங்கிக்கொண்டு கடை ஊழியர்கள் 4 பேர் கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி அதிகாலை காரில் கோவைக்கு சென்று கொண்டிருந்தனர்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே வந்தபோது, 2 கார்களில் வந்த 4 பேர் திடீரென ஊழியர்கள் வந்த காரை வழிமறித்தனர். அப்போது நகைகளை எடுத்து சென்ற காரில் இருந்தவர்களை மிரட்டி 6 கிலோ தங்க நகை மற்றும் ரூ.60 லட்சத்தை காருடன் கொள்ளையடித்து சென்றனர்.

இதுதொடர்பாக மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.பவானீஸ்வரி, சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி ஆகியோரின் உத்தரவுப்படி தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் 3 போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 22 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அடங்கிய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டது.

கேரளாவை சேர்ந்தவர்கள்

மேலும் சுங்கச்சாவடிகள் மற்றும் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனையும், பெங்களூருவில் நகை வாங்கிய கடை மற்றும் நகை வாங்கி விற்பனை செய்யும் இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகில் உள்ள தங்கும் விடுதிகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் நகைக்கடை ஊழியர்கள் பெங்களூருவில் இருந்து வந்த கார், கொல்லாபுரி அம்மன் கோவில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த காரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே தேடுதல் வேட்டையில் கிடைத்த கண்காணிப்பு கேமரா பதிவுகள், செல்போன் பதிவுகள் மற்றும் வாகன பயன்பாட்டு விவரங்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நகை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் 5-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பு இருந்ததால் இது கூட்டு கொள்ளை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

9 பேர் கைது

இதைத்தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சுஜித் (29), சரத் (36), பிரவீன் தாஸ் (33) ஆகிய 3 பேர் கோவையில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 3 கார்கள், 3 செல்போன்கள் மற்றும் 33 கிராம் எடை கொண்ட 2 தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்களிடம் நடத்திய விசாரணையின்பேரில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சிகாபுதின் என்ற சிபு (36), சைனு (30), அகில் (30), சஜிஷ் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு சொகுசு கார், ஒரு செல்போன் மற்றும் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட அந்தோணி, சிரில் ஆகிய 2 பேர் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 6 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக இதுவரை மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

---------------

மேலும் செய்திகள்