பெரம்பலூர்
தொழிலாளி வீட்டில் ரூ.20 ஆயிரம் திருட்டு
|பெரம்பலூர் அருகே தொழிலாளி வீடு மற்றும் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ரூ.20 ஆயிரம் திருட்டு
பெரம்பலூர் அருகே விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 39), கூலித்தொழிலாளி. இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது மனைவி ஷோபனாவை சிகிச்சைக்காக சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அழைத்து சென்றார்.
பின்னர் சிகிச்சை முடிந்து இரவில் மனைவியை அழைத்துக்கொண்டு ராஜா வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து ராஜா உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.
கோவில் உண்டியல் உடைப்பு
இதேபோல் நேற்று காலை விளாமுத்தூர்-தீரன் நகர் சாய் பாபா கோவில் செல்லும் சாலையில் உள்ள ஆலங்குடியான் கோவிலின் உண்டியலும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 2 சம்பவங்களிலும் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் ஒரே கும்பலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடங்களுக்கு சென்று தடயங்களை சேகரித்து சென்றனர். போலீஸ் மோப்ப நாய் சம்பவ இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டது. அந்த நாய் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிளை திருட முயற்சி
பெரம்பலூர் விவேகானந்தர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (38). செல்போன் கடை உரிமையாளர். நேற்று முன்தினம் இரவு ராதாகிருஷ்ணன் தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமி ஒருவர் திருட முயற்சி செய்துள்ளார். மோட்டார் சைக்கிளின் முன்பகுதி சேதமடைந்திருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.