கன்னியாகுமரி
சுசீந்திரம் அருகே தனியார் மதுபானக்கூடத்தில் ரூ.94 ஆயிரம் திருட்டு
|சுசீந்திரம் அருகே தனியார் மதுபானக்கூடத்தில் ரூ.94 ஆயிரம் திருடிய 3 ஊழியர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மேலகிருஷ்ணன்புதூர்:
சுசீந்திரம் அருகே தனியார் மதுபானக்கூடத்தில் ரூ.94 ஆயிரம் திருடிய 3 ஊழியர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுபானக்கூடத்தில் திருட்டு
நாகர்கோவில் கோட்டார் ஈழவர் சன்னதி தெருவை சேர்ந்தவர் குமரன் என்ற நயினார் குமார் (வயது 53). இவர் சுசீந்திரம் அருகே உள்ள நல்லூரில் தனியார் மதுபானக்கூடம் நடத்தி வருகிறார். இங்கு சம்பவத்தன்று மேஜையில் வைத்திருந்த ரூ.94 ஆயிரத்து 406 திடீரென மாயமானது. இதுகுறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மதுபானக்கூடத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் பணத்தை எடுத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர்களிடம் நயினார் குமார் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் பணத்தை திருப்பி தருவதாக கூறியுள்ளனர். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்துள்ளனர்.
3 பேர் மீது வழக்கு
இதனைத்தொடர்ந்து நயினார் குமார் பணம் திருட்டு தொடர்பாக சுசீந்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் மதுபானக்கூடத்தில் வேலை பார்த்த நெல்லை மாவட்டம் முக்கூடல் தாளார்குளம் பகுதியை சேர்ந்த அந்தோணி சவரிமுத்து (45), களக்காடு பகுதியை சேர்ந்த சந்திரன் (44), ராமநாதபுரம் மாவட்டம் வேப்பன்குளம் பகுதியை சேர்ந்த நம்புவேல் (40) ஆகிய 3 பேர் சேர்ந்து பணத்தை திருடியதாக குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் சுசீந்திரம் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகிறார்கள்.