செங்கல்பட்டு
கூட்டுறவு வங்கி வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட்டுகளில் இருந்து ரூ.5 லட்சம் திருட்டு
|கூட்டுறவு வங்கி வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மொபட்டுகளில் இருந்து ரூ.5 லட்சம் திருடப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட பொத்தேரி திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் மாதுராம் (வயது 37), இவர் அதே பகுதியில் அடகு கடை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை தனது மொபட் சீட்டுக்கு அடியில் ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 870-ஐ வைத்துக்கொண்டு மறைமலைநகரில் உள்ள கூட்டுறவு வங்கிக்கு சென்றார். வெளியே வந்து பார்த்தபோது மொபட் சீட்டுக்கு அடியில் வைத்திருந்த ரொக்க பணம் ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 870 திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்து மாதுராம் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.
இதே போல பேரமனூர் புவனேஸ்வரி அவென்யூ பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (37) என்பவர் மறைமலைநகரில் உள்ள தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரத்தை எடுத்தார். பின்னர் தனது மொபட் சீட்டுக்கு அடியில் வைத்து கொண்டு தனது மோதிரத்தை அடகு வைப்பதற்காக மறைமலைநகர் கூட்டுறவு வங்கிக்கு சென்றார். பின்னர் நகை அடகு வைத்துவிட்டு வெளியே வந்து பார்த்தபோது தனது மொபட் சீட்டுக்கு அடியில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஆறுமுகம் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.
ஒரே நேரத்தில் 2 மொபட்டுகளில் சீட்டுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடு போனதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கி நுழைவாயின் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.