கடலூர்
குள்ளஞ்சாவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் நகை-பணம் திருட்டு
|குள்ளஞ்சாவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் நகை-பணம் திருடுபோனது.
குறிஞ்சிப்பாடி,
குள்ளஞ்சாவடி அருகே உள்ள சந்தை பேட்டை செட்டியார் தெருவை சேர்ந்தவர் ஜெகன் மோகன். இவரது மனைவி மல்லிகா (வயது 65). ஜெகன் மோகன் இறந்து விட்டதால் மல்லிகா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 24-ந்தேதி மல்லிகா தனது வீட்டை பூட்டிவிட்டு விருத்தாசலத்தில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் முன்பக்க கதவு திறந்த நிலையில் கிடந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி மல்லிகாவுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மல்லிகா வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அதில் இருந்த 9 பவுன் நகை, 168 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.8 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.