< Back
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே லோடு வேனில் இருந்த ரூ.3 லட்சம் திருட்டு - 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே லோடு வேனில் இருந்த ரூ.3 லட்சம் திருட்டு - 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

தினத்தந்தி
|
21 Sept 2023 1:08 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே லோடு வேனில் இருந்து ரூ.3 லட்சத்தை திருடி சென்ற 2 பேரை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள பிரபல மளிகை கடை ஒன்றின் மூலமாக கும்மிடிப்பூண்டி மற்றும் அதனைச்சுற்றி உள்ள மளிகை கடைகளுக்கு ஆர்டரின் பேரில் மைதா மாவு, பருப்பு வகைகள் என பல சரக்கு பொருட்கள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக மினி லோடு வேனில் டிரைவர் மாடசாமி (வயது 30) என்பவர் பொருட்களை எடுத்து வருவது வழக்கம்.

சில தினங்களுக்கு முன்பு அவருடன் பொருட்களை டெலிவரி செய்யும் லோடு மேன்னாக சதன் பாண்டியன் (24) என்பவர் உடன் சென்றார். கடைகளில் இருந்து பெறப்பட்ட ரூ.3 லட்சத்தை ஒரு பையில் வைத்து டிரைவர் மாடசாமி டிரைவர் இருக்கைக்கு பின்னால் வைத்திருந்தார்.

கவரைப்பேட்டை அடுத்த தச்சூர் அருகே போரக்ஸ் நகரில் வேனை சாலையோரம் நிறுத்தி விட்டு அருகே இருந்த மளிகை கடை ஒன்றில் மாடசாமியும், சதன் பாண்டியனும் பொருட்களை இறக்கினர். பின்னர் அவர்கள் வந்த பார்த்தபோது லோடு வேனில் வைத்திருந்த ரூ.3 லட்சத்தை காணவில்லை. இதைகண்டு 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து டிரைவர் மாடசாமி போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில் லோடு வேன் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள், பணப்பையை திருடிச்சென்றது பதிவாகியிருந்தது. விசாரணையில் லோடு வேன் அந்த பகுதிக்கு அடிக்கடி வருவதை நோட்டமிட்ட 2 பேர் கடைகளில் இருந்து ஊழியர்கள் பெறும் பணத்தை திருட திட்டமிட்டனர். அதன்படி டிரைவர் அசந்த நேரத்தில் பணத்தை சுருட்டியது தெரிய வந்தது.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து லோடு வேனில் இருந்து ரூ.3 லட்சத்தை திருடி செய்த 2 மர்ம ஆசாமிகளை தனிப்படை அமைத்து வலைவீசி தேடிவருகிறார்.

மேலும் செய்திகள்