திருவள்ளூர்
வடசென்னை அனல்மின் நிலையத்தில் ரூ.3 கோடி மின்னணு பொருட்கள் திருட்டு - 7 பேர் கைது
|மீஞ்சூர் அடுத்த வடசென்னை அனல்மின் நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான மின்னணு பொருட்களை திருடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு ஊராட்சியில் அடங்கியது வடசென்னை அனல்மின் நிலையம். இங்கு மூன்றாவது யூனிட்டில் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அனல்மின் நிலையத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 3-வது யூனிட்டில் மின்னணு பொருட்களான கண்காணிப்பு கேமரா மற்றும் உபகரணங்களை பொருத்துவதற்கான பல கோடி ரூபாய் பொருட்களை அனல்மின் நிலையத்தில் உள்ள கன்டெய்னர் பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் மர்ம நபர்கள் இந்த கன்டெய்னர் பெட்டியை உடைத்து அதிலிருந்து பொருட்களை திருடினர். அதன் மதிப்பு ரூ.3 கோடி என கூறப்படுகிறது.
இதுகுறித்து கடந்த மாதம் 17-ந் தேதி மீஞ்சூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செங்குன்றம் உதவி கமிஷனர் தலைமையில் மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் டில்லிபாபு, வேலுமணி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் சென்னை எண்ணூர் பகுதியில் சந்தேகத்தின் பேரில் போலீசார் 7 பேரை பிடித்து சென்னை செங்குன்றம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் சென்னை எண்ணூர் ஐயப்பன் கோவில் தெருவை சேர்ந்த ஹரிஷ் (வயது 21), திருவள்ளூர் மாவட்டம் பெனயூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்கின்ற வெட்டு விக்னேஷ் (20), எண்ணூர் காமராஜர் நகர் வாசு (22), பிரதாப் (19), அருண்பாண்டி (28), ஜே.ஜே நகர் முத்துபாண்டி (31), வஉசி.நகர் அஜித் (23) என்பதும் இவர்கள் வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்னணு சாதன உபகரணங்களை திருடி சென்று வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அனல் மின் நிலையத்தில் திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் 7 பேரை கைது செய்த போலீசார் பொன்னேரி குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.