< Back
மாநில செய்திகள்
பணம்-பொருட்கள் திருட்டு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

பணம்-பொருட்கள் திருட்டு

தினத்தந்தி
|
12 Sept 2023 1:24 AM IST

ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து பணம்-பொருட்கள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவோணத்தை அடுத்துள்ள வாட்டாத்திக்கோட்டை நடுவிக்கோட்டை கிராமத்தைச்சேர்ந்தவர் சந்திரன். இவர் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவருக்கு, நடுவிக்கோட்டையில் வீடு உள்ளது. கடந்த 6-ந் தேதி சந்திரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு புறப்பட்டு சென்றனர். நேற்று முன்தினம் சந்திரனின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சந்திரனின் மகன் மகேஸ்வரன் மற்றும் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.30 ஆயிரம், விலை உயர்ந்த கைக்கடிகாரம் மற்றும் பொருட்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சந்திரனின் மகன் மகேஸ்வரன் வாட்டாத்திக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தடய அறிவியல் மற்றும் கைரேகை நிபுணர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நடுவிக்கோட்டை செக்கடிகொல்லை பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (29), சிவராஜன் (23) ஆகிய இருவரும் மகேஸ்வரன் வீட்டில் பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அய்யப்பன், சிவராஜன் ஆகிய இருவரையும் வாட்டாத்திக்கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்