காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை திருட்டு
|ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை திருடப்பட்டது.
வீட்டின் பூட்டு உடைப்பு
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆயகொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுதர்சனம். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டை பகுதியில் உள்ள தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.
நேற்று வழக்கம் போல சுதர்சனம் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி ஜானகி அதே பகுதியில் ஒரு துக்க நிகழ்வுக்காக வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். திருப்பி வந்து வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது வீட்டின் பின்புற கதவுக்கான பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நகை-பணம் திருட்டு
வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன் தங்க நகை, கால் கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத் தில் ஜானகி புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை தடயங்களை சேகரித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.