< Back
மாநில செய்திகள்
கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருட்டு - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருட்டு - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

தினத்தந்தி
|
19 Aug 2023 1:30 PM IST

பொதட்டூர்பேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருடிய 2 பேரை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.

பொதட்டூர்பேட்டை,

பொதட்டூர்பேட்டை அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை கிராமத்தில் முருகன் கோவில் நெல்லி குன்ற மலையில் உள்ளது. இந்த கோவிலில் சில தினங்களுக்கு முன்பு ஆடி கிருத்திகை திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடியுடன் வந்து முருகனை தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தி சென்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கோவில் பூசாரி ராமலிங்கம் பூஜைகளை முடித்துக் கொண்டு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இரவு கோவிலில் காவலாளியாக வேலை செய்யும் ஜோதிலிங்கம் அங்கு சென்றபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணம், மற்றும் தங்க நகைகள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து காவலாளி ஜோதிலிங்கம் பூஜாரி ராமலிங்கத்திற்கு தகவல் தெரிவித்தார். ராமலிங்கம் பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் 2 மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்று கோவில் இருந்த உண்டியலை அலேக்காக வெளியே எடுத்துச் சென்று சற்று தூரத்தில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் தங்க நகை காணிக்கை ஆகியவை எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது. போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து திருட்டில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்