திருவள்ளூர்
திருவாலங்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
|திருவாலங்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நகை, பணம் திருட்டு
திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் அண்ணாநகரில் வசிப்பவர் கிருஷ்ணன் (வயது 59). இவர் கூலி வேலை செய்து வருகிறார். மனைவி மற்றும் மகனுடன் வசித்து வரும் இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல வேலைக்கு சென்றார். அவரது மகன் மற்றும் மனைவி பேரம்பாக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்ற நிலையில், இதனை அறிந்த திருடர்கள் நேற்று காலை வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், பணத்தை திருடி சென்றனர். முன் பக்கம் வந்தால் சிக்கி கொள்வோம் என பயந்தவர்கள் வீட்டின் பின் பக்க கதவை கடப்பரையால் உடைத்து தப்பினர்.
பின்னர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அதே தெருவில் உள்ள உதயகுமார் (35) என்பவர் வீட்டிலும் புகுந்துள்ளனர். வீட்டில் நகை மற்றும் பெருட்கள் ஏதும் கிடைக்காததால் கதவின் பூட்டை மட்டும் உடைத்து விட்டு சென்றனர். தகவல் அறிந்து விரைந்து வந்த திருவாலங்காடு போலீசார் திருட்டு நடைபெற்ற வீட்டில் தடைகளை சேகரித்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நிகழ்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இரவு போலீசார் இப்பகுதியில் ரேந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மற்றொரு சம்பவம்
பொன்னேரி அடுத்த திருவேங்கிடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வத்சலா (57). இவர் அ.ம.மு.க சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவில் வீட்டை பூட்டி கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம ஆசாமிகள் பின்புறம் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து பீரோவில் இருந்த ரூ.11 ஆயிரத்தை திருடி சென்றனர்.
நள்ளிரவில் போன் ஒலித்ததால் எழுந்த வத்சலா வீட்டின் பின்பக்க கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட நிலையில் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.