< Back
மாநில செய்திகள்
வேலூரில் நூதன முறையில் ஆவின் பால் திருட்டு?
மாநில செய்திகள்

வேலூரில் நூதன முறையில் ஆவின் பால் திருட்டு?

தினத்தந்தி
|
7 Jun 2023 8:56 AM IST

வேலூர் ஆவினில் தினசரி 93 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாக விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

வேலூர்,


வேலூர் சத்துவாச்சாரியில் இயங்கும் ஆவின் பால் பண்ணையில் நூதன முறையில் பால் திருட்டு நடைபெறுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரே பதிவெண் கொண்ட 2 வாகனங்கள் மூலம் தினமும் பல ஆயிரம் லிட்டர் பால் திருடப்படுவதாக கூறப்படுகிறது.

சத்துவாச்சாரி ஆவின் பண்ணையில் இருந்து திமிரி வழித்தடத்தில் இயக்கப்பட்ட 2 வாகங்களுக்கு ஒரே பதிவெண் இருப்பது தெரியவந்துள்ளது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த பால் திருட்டுக்கு ஆவின் பண்ணையில் உடந்தையாக இருந்தது யார்? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆவின் பண்ணையிலிருந்து பால் எடுத்து செல்லும் வாகங்கள் முறையாக கண்காணிப்பது யார் பொறுப்பு? என விசாரித்து வருகின்றனர்.


இந்த திருட்டு குறித்து ஆவின் நிர்வாகத்தினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் போக்குவரத்து அதிகாரிகளும் இன்று விசாரணை நடத்துகின்றனர். பால் திருட்டு கண்காணிப்பை அதிகாரிகள் தீவிரப்படுத்திய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரே பதிவெண்ணில் இயங்கிய 2 வேன்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் உரிய விசாரணைக்கு பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேலூர் ஆவினில் தினசரி 93 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாக விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், பால் உப பொருட்களான நெய், பால் கோவா, தயிர், மோர் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு ஆவின் முகவர்கள் மூலம் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகள்