திருவாரூர்
சிறுவனிடம் ஆசை வார்த்தை கூறி 9 பவுன் நகை திருட்டு
|குடவாசல் அருேக செல்போன் வாங்கி தருவதாக சிறுவனிடம் ஆசை வாா்த்தை கூறி 9 பவுன் நகைகளை திருடி சென்ற அண்ணன்- தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குடவாசல்;
குடவாசல் அருேக செல்போன் வாங்கி தருவதாக சிறுவனிடம் ஆசை வாா்த்தை கூறி 9 பவுன் நகைகளை திருடி சென்ற அண்ணன்- தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நகைகள் மாயம்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள நாரணமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன். இவருடைய மனைவி ஜெயசுதா. இவர் கடந்த மாதம் 30-ந் தேதி தனது 10 வயது மகனை வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் சென்றார். அப்போது அவர் பீரோவை பூட்டி சாவியை எடுத்து சென்றார்.ஜெயசுதா வீடு திரும்பிய பிறகும் பீரோவில் இருந்த நகைகளை சரிபார்க்கவில்லை. நேற்றுமுன்தினம் அவர் வீட்டில் பீரோவில் இருந்த நகைகளை தேடிய போது 9 பவுன் நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயசுதா தனது மகனிடம் நகைகள் குறித்து கேட்டார். அப்போது அவரது 10 வயது மகன் கூறிய பதில் அவரை திடுக்கிட வைத்தது.
போலீசில் புகார்
ஜெயசுதாவின் மகனிடம் 3 வாலிபர்கள் லாவகமாக பேசி சிறுவனுக்கு செல்போன் வாங்கி தருவதாக ஆசை வாா்த்தை கூறியும் அவனை மிரட்டியும் ஜெயசுதா வீட்டுக்குள் புகுந்து பீரோவை கள்ளச்சாவி மூலம் திறந்து அதில் இருந்த 9 பவுன் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து ஜெயசுதா குடவாசல் போலீஸ் நிலையத்தில் புகாா் அளித்தார்.
கைது
இதன்பேரில் போலீசார் குடவாசல் குயவன் பாளையத்தெருவை சேர்ந்த நாகராஜ் மகன்கள் வெங்கடேசன்(வயது25), ஹரிஹரன்(20), நாரணமங்கலம் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் சிவனேசன்(22) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் சிறுவனை மிரட்டியும், செல்போன் வாங்கி தருவதாக ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றி நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வெங்கடேசன், ஹரிஹரன், சிவநேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.