திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை
|திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
திருவள்ளூர் அடுத்த ஒதிக்காடு ரெட்ஹில்ஸ்புரம் கிராமத்தை சேர்ந்தவர் யோனா (வயது 44). இவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்கிறார். இவரது மனைவி டெய்சி. நேற்று முன்தினம் காலை இருவரும் வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தோடு அதே ஊரில் உள்ள உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள சென்றனர். இறுதி சடங்கு முடிந்து மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்கம் கிரில் கேட் பூட்டியிருந்தது. அதை திறந்து உள்ளே சென்றபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் மின் விளக்குகள் எரிந்துக்கொண்டிருந்தது. மேலும் மின் விசிறி ஓடிக்கொண்டிருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் அங்கும் இங்குமாக சிதறி கிடந்தன. படுக்கை அறைக்கு சென்று பீரோவை பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் தங்க நகை மற்றும் ரூ.5 லட்சத்து 35 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த யோனோ இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மற்றும் போலீசார் கைரேகை நிபுணர்கள் கொள்ளையர்களின் கைரேகைகளை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்றது. கொள்ளையர்களை பிடிக்கவில்லை.
இது குறித்து யோனா கொடுத்த புகாரின் பேரில் புல்லரம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாலா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். மேலும் தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.