தென்காசி
நகைக்கடையில் 2½ பவுன் நகை திருட்டு
|தென்காசியில் நகைக்கடையில் 2½ பவுன் நகை திருடப்பட்டது.
தென்காசியை சேர்ந்தவர் அகமது மைதீன். இவர் தென்காசி சுவாமி சன்னதி பஜாரில் நகைக்கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பெண்கள் நகை வாங்குவது போன்று வந்தனர். கடையில் இருந்த பணியாளர்கள் அந்த பெண்களிடம் நகைகளை காட்டி விலையை கூறிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து அந்த பெண்கள் நகை வாங்காமல் அங்கிருந்து சென்று விட்டனர். இதன் பிறகு அன்று இரவு கடை உரிமையாளர் அகமது மைதீன் கடையில் விற்பனை செய்த நகைகளின் விவரம் மற்றும் இருப்பு விவரத்தை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது 20 கிராம் எடையுள்ள 2 ஜோடி கம்மல்களில் எடை குறிப்பிடப்பட்டிருக்கும் சீட்டை காணவில்லை. அந்த கம்மல்களை எடுத்து பார்த்தபோது அவை கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது. உடனடியாக கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.
அப்போது, அந்த 2 பெண்களும் நகைகளை பார்ப்பது போன்று தங்களது கையில் வைத்திருந்த கவரிங் நகையை அங்கு வைத்துவிட்டு தங்க நகைகளை திருடிச் சென்றது பதிவாகி இருந்தது.
இதுகுறித்து தென்காசி போலீசில் அகமது மைதீன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பெண்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.