ஜெயின் கோவிலில் திருடிய 4 பேர் கைது
|பெங்களூரு சாந்திநகர் பகுதியில் உள்ள ஜெயின் கோவிலில் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகளை போலீசார் மீட்டனர்.
பெங்களூரு:
பெங்களூரு சாந்திநகர் பகுதியில் உள்ள ஜெயின் கோவிலில் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகளை போலீசார் மீட்டனர்.
ரூ.10 லட்சம் மதிப்பு
பெங்களூரு சாந்திநகர் பகுதியில் ஆதினாத் ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலை வழக்கம்போல் பூசாரி பூட்டிவிட்டு சென்றார். அன்றைய நாள் இரவு மர்மநபர்கள் சிலர் கோவிலுக்குள் புகுந்தனர். பின்னர் கோவிலில் இருந்த வெள்ளி பொருட்களை திருடிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அறிந்த கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக அசோக்நகர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தனிப்படை போலீசார் மூலம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதன்பேரில் ராஜஸ்தானில் பதுங்கி இருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் தான், கோவிலில் புகுந்து திருடியது தெரிந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் மற்றும் நகைகள் மீட்கப்பட்டது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட நகைகள் பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அதனை பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்த் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
4 பேர் கைது
இதையடுத்து போலீஸ் கமிஷனர் தயானந்த் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், 'சாந்திநகரில் உள்ள ஜெயின் கோவிலில் மர்மநபர்கள் திருட்டில் ஈடுபட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் பதுங்கி இருந்த 4 பேரை கைது செய்தனர். அவர்கள் தான் கோவிலில் புகுந்து வெள்ளி பொருட்களையும், ஆபரணங்களையும் திருடியது உறுதியானது.
இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெள்ளி நகைகள் மீட்கப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அசோக்நகர் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்' என்றார்.