1¼ கிலோ தங்க நகைகளை திருடிய ஊழியர்கள் 2 பேர் கைது
|ஆந்திராவுக்கு கொண்டு செல்லும் வழியில் 1¼ கிலோ தங்க நகைகளை திருடிய கடையின் ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு:
ஆந்திராவுக்கு கொண்டு செல்லும் வழியில் 1¼ கிலோ தங்க நகைகளை திருடிய கடையின் ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திராவுக்கு...
பெங்களூரு அல்சூர் கேட் பகுதியில் நகைக்கடை முகேஷ் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடையில் உள்ள நகைகளை ஆந்திராவில் உள்ள நகைக்கடைக்கு ஊழியர்கள் சிலரிடம் கொடுத்து அனுப்புவது வழக்கம். அதுபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் தனது கடையில் வேலை செய்த 2 ஊழியர்களை ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள நகைக்கடைக்கு அனுப்பி வைத்தார். அப்போது அவர்களிடம் 1¼ கிலோ தங்க நகைகளை கொடுத்து அனுப்பினார்.
அதன்படி ஊழியர்கள் 2 பேரும் அந்த நகைகளை வாங்கி கொண்டு ஆந்திரா புறப்பட்டனர். பின்னர் அவர்கள் நகைக்கடை உரிமையாளர் முகேசை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது ஆந்திராவுக்கு நகைகளை எடுத்து கொண்டு சென்றதாகவும், செல்லும் வழியில் மர்மநபர்கள் சிலர் அவர்களை வழிமறித்ததாகவும் கூறினர். மேலும் கத்தியை காட்டி கொலை செய்வதாக மிரட்டிய அவர்கள், தங்களிடம் இருந்த தங்க நகைகளை கொள்ளை அடித்துவிட்டு தப்பி சென்றதாகவும் கூறினர். இதைக்கேட்டு முகேஷ் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து அல்சூர்கேட் போலீசில் புகார் அளித்தார்.
நகைகள் மீட்பு
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நகையை கொண்டு சென்ற ஊழியர் ஒருவர் தங்கநகைகளை திட்டமிட்டு திருடிவிட்டு, கொள்ளை நாடகமாடியது தெரிந்தது. அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், திருடப்பட்ட நகையுடன் ஊழியர் ஒருவர் ராஜஸ்தானில் இருப்பது உறுதியானது.
இதையடுத்து போலீசார் ராஜஸ்தான் விரைந்தனர். அவர்கள் ராஜஸ்தானில் பதுங்கிய நபரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1¼ கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டது. மேலும் 2 ஊழியர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட நகைகள் பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அவற்றை பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த் பார்வையிட்டார்.