நாமக்கல்
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கோழித்தீவன ஆலை கணக்காளரிடம் ரூ.2 லட்சம் திருட்டு 2 மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
|நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கோழித்தீவன ஆலை கணக்காளரிடம் ரூ.2 லட்சத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கணக்காளர்
நாமக்கல் அருகே உள்ள மரூர்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜா (வயது 28). இவர் தனியார் கோழித்தீவன ஆலையில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் தனது கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் எடுத்தார். பின்னர் அந்த பணத்தை மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் உள்ள கவரில் வைத்து கொண்டு சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
நாமக்கல் அருகே உள்ள முதலைப்பட்டி பகுதியில் சென்றபோது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் உங்களது மோட்டார் சைக்கிளில் இருந்த பை தவறி கீழே விழுந்து விட்டது என கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துராஜா தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, பின்னால் சென்று பார்த்தார்.
ரூ.2 லட்சம் திருட்டு
அதற்குள் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் முத்துராஜா மோட்டார் சைக்கிள் கவரில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து முத்துராஜா நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரின்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரூ.2 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கோழித்தீவன ஆலை கணக்காளரிடம் கவனத்தை திசை திருப்பி ரூ.2 லட்சம் திருடி சென்ற சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.