நாமக்கல்
தனியார் நிறுவன உதவி பொது மேலாளரின் வங்கி கணக்கில் நூதன முறையில் ரூ.60 ஆயிரம் திருட்டு சைபர் கிரைம் போலீசார் விசாரணை
|ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சிங் (வயது 45). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் உதவி பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனியார் வங்கி ஒன்றில் கணக்கு வைத்து உள்ளார்.
இந்த நிலையில் அவரது செல்போன் எண்ணுக்கு 'உங்கள் வங்கி கணக்கு லாக் ஆகிவிட்டது. பான் கார்டை லிங் செய்தால், மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்' என மெசேஜ் வந்துள்ளது. அதை உண்மை என நம்பி, தனது பான்கார்டை பிரதாப் சிங் 'லிங்' செய்துள்ளார்.
இதையடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.49 ஆயிரத்து 919 எடுக்கப்பட்டு உள்ளது. அடுத்த 2 நிமிடங்களில் மேலும் ரூ.9,998 எடுக்கப்பட்டது. மொத்தமாக ரூ.59 ஆயிரத்து 917 திருடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதாப் சிங், இந்த நூதன திருட்டு குறித்து நாமக்கல் சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மூலம் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.