< Back
மாநில செய்திகள்
பரமத்திவேலூரில் பட்டப்பகலில் துணிகரம்:  காரில் வைத்திருந்த ரூ.20 லட்சம் திருட்டு  3 மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
நாமக்கல்
மாநில செய்திகள்

பரமத்திவேலூரில் பட்டப்பகலில் துணிகரம்: காரில் வைத்திருந்த ரூ.20 லட்சம் திருட்டு 3 மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தினத்தந்தி
|
17 Aug 2022 3:38 PM GMT

பரமத்திவேலூரில் பட்டப்பகலில் காரில் வைத்திருந்த ரூ.20 லட்சம் திருட்டு போன துணிகர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 3 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் பட்டப்பகலில் காரில் வைத்திருந்த ரூ.20 லட்சம் திருட்டு போன துணிகர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 3 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரியல் எஸ்டேட் அதிபர்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகுதியில் உள்ள மருதன் காலனியை சேர்ந்தவர் முத்துசாமி மகன் பாலசுப்பிரமணி (வயது 49). ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய மகன் ஹரிஹரன் (25). இவர் பள்ளி சாலையில் கார் பார்க்கிங் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தந்தை, மகன் இருவரும் நேற்று மதியம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஒரு அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.8 லட்சம், ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.12 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சத்தை எடுத்து கொண்டு அவர்களது காரில் பேட்டை பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்றனர்.

இதையடுத்து ரூ.20 லட்சத்தை காரிலேயே வைத்து விட்டு வீட்டுக்குள் சென்றனர். பின்னர் திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதிக்கு செல்வதற்காக காரை எடுக்க வந்த போது காரில் வைத்திருந்த ரூ.20 லட்சம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வலைவீச்சு

பின்னர் தந்தையும், மகனும் அக்கம் பக்கத்தில் வசித்தவர்களிடம் யாராவது இந்த வழியாக சென்றார்களா? என கேட்டனர். அப்போது அங்கிருந்தவர்கள் ஒருவர் மொபட்டிலும், 2 பேர் மோட்டார் சைக்கிளிலும் சென்றதை பார்த்ததாக கூறினர். இதுகுறித்து பாலசுப்பிரமணி வேலூர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காரில் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை திருடி சென்ற 3 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் காரில் வைத்திருந்த ரூ.20 லட்சம் திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்