< Back
மாநில செய்திகள்
பரமத்திவேலூரில் துணிகரம்:  3 வீடுகளில் 30 பவுன் நகை, 1½ கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு  மர்ம நபர்களை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

பரமத்திவேலூரில் துணிகரம்: 3 வீடுகளில் 30 பவுன் நகை, 1½ கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு மர்ம நபர்களை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு

தினத்தந்தி
|
1 Aug 2022 6:00 PM GMT

பரமத்திவேலூரில் துணிகரம்: 3 வீடுகளில் 30 பவுன் நகை, 1½ கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு மர்ம நபர்களை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் 3 வீடுகளில் 30 பவுன் நகை, 1½ கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற கல்வி அலுவலர்

பரமத்திவேலூரில் உள்ள சக்ரா நகர் கம்பர் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் பெரியண்ணன் (வயது 62). இவருடைய மனைவி நிர்மலாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் பெரியண்ணன் மருத்துவமனையிலேயே தங்கி மனைவியை கவனித்து வந்தார். இந்த நிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் பெரியண்ணன், வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், வேலூர் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டு மற்றும் பீரோவை உடைத்து வீட்டில் இருந்த 30 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

தேங்காய் வியாபாரி

அதேபோல் சக்கரா நகரில் உள்ள ராஜாஜி தெருவை சேர்ந்தவர் கண்ணன் (65). தேங்காய் வியாபாரி. இவர் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்ததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 1½ கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் சக்ரா நகர் அருகே உள்ள தில்லை நகரை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில் பீரோவில் வைத்திருந்த வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

3 தனிப்படை அமைப்பு

ஒரே நாளில் ஆள் இல்லாத 3 வீடுகளின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். வர்த்தக, வணிக மற்றும் தொழில் அதிபர்கள் வசிக்கும் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தும் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். எனவே மர்ம நபர்களை விரைந்து கண்டுபிடித்து கைது செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்