கோயம்புத்தூர்
வாலிபர்களை அரிவாளால் வெட்டியவழக்கில் மேலும் 2 பேர் கைது
|கோவையில் 2 வாலிபர்களை ஓட, ஓட வெட்டிய வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
கோவை
கோவையில் 2 வாலிபர்களை ஓட, ஓட வெட்டிய வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அரிவாள் வெட்டு
கோவை கணபதி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் நிதிஷ்குமார் (வயது 21). டான்ஸ் மாஸ்டர். இவர் மீது சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் கஞ்சா, கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரது நண்பர் ரத்தினபுரியை சேர்ந்த ரஞ்சித் (23). இவர் மீதும் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் கஞ்சா உள்பட பல வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நிதிஷ்குமாரை சரவணம்பட்டி போலீசார் கடந்த, 31-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் 9-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.
இதற்காக கோர்ட்டில் கையெழுத்து போடுவதற்காக கடந்த 12-ந் தேதி நிதிஷ்குமார், தனது நண்பர்கள் ரஞ்சித் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் கோர்ட்டுக்கு வந்தார். பின்னர் கோர்ட்டில் கையெழுத்து போட்டுவிட்டு 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ராம் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, முன்விரோதம் காரணமாக அவர்களை ஒரு கும்பல் துரத்தி வந்தனர். அந்த கும்பல் நிதிஷ்குமாரை ஓட ஓட விரட்டி அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டினர். அப்போது அதை தடுத்த ரஞ்சித்திற்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.
8 பேர் கைது
தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் காயமடைந்த 2 பேரையும் மீட்டு, கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் இந்த வழக்கில் தொடர்புடைய சரவணம்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் (24), அருண் பிரகாஷ் (22), பிரகாஷ் (26), ஆதித்தியன் (23), கார்த்தி (22), ஜெர்மன் ராகேஷ் (22), பிரதீப் (20), கோகுல் விக்னேஷ் (20) ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக இருந்த சிலரை தேடி வந்தனர்.
கை, கால்கள் முறிவு
இந்த நிலையில் ஒண்டிப்புதூர் பாலத்தில் இருந்து தவறி விழுந்து கை, கால்களில் முறிவு ஏற்பட்டு, 2 பேர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் காயமடைந்த 2 பேரும் கொண்டையம்பாளையத்தை சேர்ந்த ரவீந்தரன் (23), கீரணத்தத்தை சேர்ந்த சஞ்சீவ் குமார் (21) என்பதும், கோவையில் வாலிபர்களை ஓட, ஓட அரிவாளால் வெட்டிய வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இதில் ரவீந்தரன் மீது கொலை வழக்கு, ஆள்கடத்தல் வழக்கு உள்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதும், வாலிபர்களை அரிவாளால் வெட்டியதில் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.