திண்டுக்கல்
தனியார் பஸ் டிரைவரை சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்
|வேடசந்தூர் பஸ் நிலையத்தில் தனியார் பஸ் டிரைவரை வாலிபர்கள் சரமாரியாக தாக்கினர். அவர்களை தடுக்க வந்த கண்டக்டருக்கும் அடி-உதை விழுந்தது.
தனியார் பஸ் டிரைவர்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் நேற்று மாலை ஒட்டன்சத்திரத்தில் இருந்து தனியார் பஸ் ஒன்று வேடசந்தூர் பஸ் நிலையத்துக்கு வந்தது.
அந்த பஸ்சை கள்ளிமந்தையத்தை சேர்ந்த செந்தில் (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக இடையக்கோட்டையை சேர்ந்த விஜயகுமார் (38) இருந்தார். பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கியதும், மீண்டும் ஒட்டன்சத்திரம் செல்வதற்காக பஸ் நிலைய வளாகத்தில் பஸ்சை டிரைவர் நிறுத்தினார். அப்போது பஸ் நிலையத்துக்குள் மோட்டார் சைக்கிள்களில் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் வந்தனர்.
சரமாரி தாக்குதல்
பின்னர் மோட்டார் சைக்கிள்களை, ஒட்டன்சத்திரம் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த தனியார் பஸ்சை மறித்து நிறுத்திய வாலிபர்கள், திபு, திபுவென பஸ்சுக்குள் ஏறி கண்இமைக்கும் நேரத்துக்குள் டிரைவரை சரமாரியாக தாக்க தொடங்கினர். இதை சற்றும் எதிர்பார்க்காத டிரைவர் செந்தில் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக போராடினார். ஆனால் அதற்குள் அவருடைய சட்டை, பனியன் ஆகியவற்றை வாலிபர்கள் கிழித்து எறிந்தனர்.
இதற்கிடையே அங்கு வந்த கண்டக்டர் அவர்களை தடுக்க முயன்றார். ஆனால் அவருக்கும் அடி, உதை விழுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகள், உடனே வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் மற்றும் போலீசார் பஸ் நிலையத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் டிரைவரை அடித்து உதைத்துக்கொண்டிருந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
வீடியோ வைரல்
வாலிபர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த செந்திலை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தனியார் பஸ்சை மறித்தபடி 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்ததும், அவர்களை சற்று தள்ளி மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி டிரைவர் கூறியதால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் தங்களின் நண்பர்களை அழைத்து வந்து டிரைவரையும், கண்டக்டரையும் தாக்கியது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தனியார் பஸ் டிரைவரை வாலிபர்கள் தாக்கிய காட்சிகள் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் வீடியோவாக பதிவாகி இருந்தது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. பஸ்சுக்குள் புகுந்து டிரைவரை வாலிபர்கள் தாக்கிய சம்பவம் வேடசந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.