திருச்சி
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு
|சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மணப்பாறை:
சிறுமி கர்ப்பம்
மணப்பாறை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், அவரை அவரது தாய் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்தபோது அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக சிறுமி அளித்த புகாரின்பேரில் மணப்பாறை மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வீ.பூசாரிபட்டியைச் சேர்ந்த பாலு(26), சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகியதும், இதில் சிறுமி கர்ப்பமானதும் தெரியவந்தது. இது குறித்து போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலுவை வலைவீசி தேடி வருகின்றனர்.
அரசு பஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல்
*துறையூரை சேர்ந்தவர் நடேசன்(58). அரசு பஸ் டிரைவரான இவர் முசிறி பஸ் நிலையத்தில் இருந்து வேளகாநத்தம் பகுதிக்கு பஸ்சை ஓட்டிச்சென்றார். முசிறி கைகாட்டி பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி, பயணிகளை ஏற்றியபோது, பின்னால் வந்த தனியார் பஸ், அரசு பஸ்சை முந்திச்சென்று, அதனை மறித்து நின்றது. மேலும் அந்த பஸ் டிரைவர், நடேசனை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அரசு பஸ் மீது, தனியார் பஸ் இடித்தது. இதில் அரசு பஸ்சின் முன் பகுதி சேதமடைந்தது. இது குறித்து தனியார் பஸ்சின் உரிமையாளர் கைலாசம் (75), தனியார் பஸ் டிரைவர் சீகம்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் ராஜலிங்கம் (27), கண்டக்டர் வடக்கு சொரியம்பட்டியை சேர்ந்த கனகராஜ் (45) ஆகியோர் மீது முசிறி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*காட்டுப்புத்தூர் அருகே உள்ள ஸ்ரீராமசமுத்திரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த பரமசிவத்தின் மகன் பாலநாராயணன்(30). இவர் சம்பவத்தன்று இரவு விஷக்காயை தின்று மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் கைது
*கல்லக்குடி அருகே நத்தமாங்குடி கிராமத்தை சேர்ந்த திருமுருகன்(38) தனது மோட்டார் சைக்கிளில் வயலுக்கு சென்றார். அங்கு கோவில் அருகே நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை ஒருவர் திருடிச்செல்ல முயன்றார். அவரை பிடித்து கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகிலாவிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம், மனோஜ்பட்டி சிவசக்தி நகரை சேர்ந்த அய்யாவு மகன் திவாகர்(32) என்பதும், பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.
*புள்ளம்பாடி ஒன்றியம், எம்.கண்ணனூர் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியனின் மகன் சுபாஷ்சந்திரபோஸ்(32). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக ராதிகா கோபித்துக் கொண்டு, தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை(விஷம்) சுபாஷ்சந்திரபோஸ் குடித்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.